நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜியும் ,காந்தியும் ,நேருவும் மற்றும் பல தலைவர்களும் .....

பகுதி -1


'ஜெய் ஹிந்த் ' என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும். 'எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ' என்றும் 'சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் வாழ விரும்பினால் நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ' என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டியெழுப்பியவராயிற்றே.


மர்மம் நிறைந்த அவரது மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இன்றைய தேதி வரை அவரது மரணம் குறித்த எந்த ஒரு ஸ்திரமான முடிவுக்கும் வர இயலாமல் இருக்கிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிஅவர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியபோது தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த ஜப்பானிய டாக்டரான யோஷிமி தமயோஷி கொடுத்த வாக்குமூலத்தின் படி அன்று இரவே போஸ் இறந்து விட்டார் என்று அறியப்படுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். காந்திஜியோ ' இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நேதாஜி எப்படி இறப்பார் ' என்ற அதீத நம்பிக்கையோடு இருந்தார். நேதாஜி ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்றும் தக்க தருணத்தில் தாய் நாட்டிற்குச் சேவை செய்ய மீண்டும் வருவார் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். நேதாஜியின் மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைத்த முதல் நபர் வைஸ்ராய் வேவல். அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடவில்லையென்றாலும் அந்த விசாரணையில் போஸ் இறந்து விட்டார் என்றே நம்பப் பட்டதாகத் தெரிகிறது.


இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான முதல் விசாரணைக் கமிஷன் அப்போது இரயில்வே மந்திரியாக இருந்த ஷா நவாஸ் கான் தலைமையில் நிறுவப்பட்டது. ஆனால் அதிக விசாரணை எதுவுமின்றி துரிதமாக நேதாஜி இறந்த செய்தியை ஷா ஊர்ஜிதப்படுத்தினார். அவசரத்தில் அள்ளித் தெளித்த இந்த கோலத்தால் ஷா INAவில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்திருந்த போதும், அவர் ஒரு சிறந்த போர்வீரராக இருந்த போதும், அவருடைய விசாரணைத் திறனைப் பலரும் சந்தேகித்தனர். பிறகு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது ஜி.டி.கோஸ்லாவின் தலைமையில் இன்னொரு விசாரணைக்கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சிங்கப்பூர், பேங்க்காக், ரங்கூன் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலரைப் பேட்டி கண்டது. ஆனால் ஜி.டி.கோஸ்லா நேதாஜி இறந்த இடமான ஃபோர்மோசா என்ற இடத்துக்குச் செல்லாமலேயே அறிக்கையை சமர்ப்பித்ததால் அவ்விசாரணைக் குழுவையும் யாரும் நம்பவில்லை. மேலும் நேதாஜிக்கும் கோஸ்லாவிற்கும் இடையில் இணக்கமான நட்பு இருந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த விசாரணைக்கமிஷனின் அறிக்கை நம்பகத் தன்மையை இழந்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது கோஸ்லாவிற்கும் பண்டிட் நேருவின் குடும்பத்திற்குமிடையேயான மிக நெருங்கிய நட்புறவு. நேதாஜியின் கடைசிக் காலத்தில் நேதாஜியும் நேருவும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். கோஸ்லாவின் அறிக்கையும் நேதாஜி இறந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் அதற்கு முக்கிய ஆதாரமாக டாக்டர் யோஷிமி தமயோஷியின் மருத்துவ அறிக்கையே சுட்டப்பட்டது. கோஸ்லாவின் அறிக்கை மொரார்ஜி தேசாய் உட்பட பலராலும் நிராகரிக்கப்பட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாம் முறையாக ஜஸ்டிஸ் ஜே.சி.முகர்ஜியின் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் நிறுவப்பட்டது. இன்றைக்கும் இந்த கமிஷன் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இந்த முறையாவது உண்மையை வெளிக்கொணர்வார்கள் என நம்புவோம்.

                                                        இதன் தொடர்ச்சி .........     பகுதி -2

2 comments:

  1. namaste. nethaji team came our tiruchirappalli last nov25; v recd 65 good dedicated delegates from kolkatta; so v proud recd a bike rally

    ReplyDelete
  2. one of the kolkatta nethaji leader cell nmbr 9143402754

    ReplyDelete

என்னைப்பற்றி