நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

காந்தி செய்தது சரியா? தப்பா?


பாரத மணித் திருநாட்டில் திரு அவதாரம் செய்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதிலே நமக்குத் தெரிந்த பிரபலமான தலைவர்கள் பலர் இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணி ஆற்றிய எத்தனையோ தலைவர்களில் நம் அனைவராலும் "நேதாஜி" என்று அன்புடன் அழைக்கப் படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களில் முக்கியமானவர். சமீபத்தில் நம் இந்தியாவில் தகவல்கள் பெறும் சட்டம் ஏற்படுத்தப் பட்டதும் ஒருவர் திரு நேதாஜி பற்றிய தகவல்கள் அவருக்கு மிக அவசரமாய்த் தேவைப் பட்டதால் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தை நாட அமைச்சகம் கையை விரித்து விட்டது. "நேதாஜியா? யார் அவர்? எங்கே இருந்தார்? சுதந்திரப் போராட்ட வீரரா? அப்படி ஒண்ணும் எங்க கிட்டே தகவல் இல்லையே?"னு சொல்லி விட்டது. சொன்னவர் யாரோ படிக்காதவர் இல்லை. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் பொறுப்பான பதவி வகிப்பவர். ஒரு வருடம் முன்னால் இதைத் தின்சரிப் பத்திரிகைகளில் படிச்சதில் இருந்தே மனம் கொதிப்படைந்தது. இன்றைய நாட்களில் விளம்பரம் எதுக்கும் தேவைப் படுகிறது. ஆனால் திரு நேதாஜி நாட்டின் நலத்தையும், அதன் விடுதலையையும், மக்களின் சுதந்திரத்தையும் மட்டுமே முதன்மையாக நினைத்தவர். அதற்காகப் பதவியைத் துறக்கவும் சித்தமாய் இருந்ததோடு துறந்தும் காட்டியவர். மக்கள் தலைவர். அவரைப் பின்பற்றிய அநேகரில் தமிழ்நாட்டவர் தான் அதிகம். ஆனால் இன்றய தலைமுறை அதிகம் அவரை அறிந்திருக்கவில்லை. ஒரிஸா மாநிலம் கட்டாக் ஜில்லாவில் 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி திரு ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி போஸுக்கும் 6வது மகனாய்ப் பிறந்தார் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்கள். அவருக்குப் பின் 2 குழந்தைகள் பிறந்தன அவர் பெற்றோருக்கு. 8 குழந்தைகளில் ஒருவரான போஸுக்கு வீட்டில் அவ்வளவாய்க் கவனிப்பு இல்லை என்றாலும் தந்தை படிக்க அனுப்பியது கல்கத்தாவில் உள்ள பிரசித்தியான ஆங்கிலேயப் பள்ளிக்கு. எல்லாக் குழந்தைகளையும் அங்கே அனுப்பிப் படிக்க வைத்த அவர் தந்தை போஸையும் அங்கே அனுப்பி வைத்தார். மிகவும் நன்றாய்ப் படித்து வந்த போஸ் அவர்கள் இந்தியர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் நடத்தப் பட்ட விதத்தில் மேலும் மனம் வருந்தினார். படிப்பு முடிந்ததும் அவர் தந்தை அவரை மேல் படிப்புக்காகவும் அந்தக் கால கட்டத்தில் மிகவும் உயர் படிப்பெனக் கருதப் பட்ட ஐ.சி.எஸ். தேர்வு எழுதவும் போஸ் அவர்களை 1920-ல் இங்கிலாந்துக்கு அனுப்பினார். மனமே இல்லாமல் சென்ற போஸ் அவர்கள் 8 மாதங்களிலேயே ஐ.சி.எஸ்.ஸில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதோடு அல்லாமல் அங்கேயே நல்ல வேலையிலும் அமர்ந்தார். மேலதிகாரியின் நடத்தையில் மனம் வெறுத்துப் போய் போஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார்.
சுதந்திரப் போராட்டம் காந்தியைத் தலைவராகக் கொண்டு வேகம் பிடித்திருந்த அந்தக் கால கட்டத்தில் தாய்நாடு திரும்பிய போஸ் அவர்கள் முதலில் இளைஞர் காங்கிரஸ் காரியதரிசியாக இருந்தார். அப்போது அவருக்குத் "தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்" அவர்களுடன் நல்லுறவு ஏற்படவே இருவரும் கல்கத்தா முனிசிபல் தேர்தல்களில் தங்கள் உழைப்பினால் வெற்றி பெற்றனர். மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட சி.ஆர். தாஸ் சில நாட்களில் இறந்து விட்டார். காந்தியின் தலைமையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக் காரியக் கமிட்டியின் காரியதரிசியாக 1927-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு காந்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேகம் நிறைந்த போஸ் அவர்களுக்கு காந்தியின் மென்மையான அணுகுமுறையும், நிதானமான போக்கும் பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்தப் போரட்டங்களில் பல முறை சிறைக்குச் சென்றார் போஸ். என்றாலும் அவர் மனம் உறுதிப் பட்டது. சற்றும் மனம் சலிக்கவில்லை.
1931-ம் ஆண்டு முதன் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸ் அவர்கள் தவிர்க்க முடியாமல் 2 ஆண்டுகளில் ஐரோப்பா சென்றார். ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து உழைத்தார். 1938-ல் இரண்டாம் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு ஆதரவு நிறையவே இருந்தது. அவரின் அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது. அவரின் சொற்பொழிவோ என்றால் கேட்கவே வேண்டாம். அனைவரையும் சுண்டி இழுத்தது. கவியரசர் ரவீந்திர நாத் தாகூர் போஸ் காங்கிரஸ் தலைவர் ஆனதைத் தன்னுடைய சாந்தி நிகேதனில் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் என்றால் மற்ற சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
2-வது முறையாக போஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று நேற்று எழுதி இருந்தேன். முதலில் 1938-ல் திரிபுராவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் காந்தியே போஸின் பெயரை முன்மொழிந்து, வழி மொழிந்து அவர் காங்கிரஸின் தலைவராக வர ஏற்பாடு செய்தார். ஒரே வருஷத்தில் மனம் மாறிய காந்தி 1939-ல் திரிபுரா காங்கிரஸில் நேருவையும், பட்டேலையும் புதிய தேர்தலில் நிற்கச் சொன்னார். ஆனால் இருவரும் மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை தன்னுடைய வேட்பாளராக நிறுத்தினார். ஒரு வேளை இளம் புயல் ஆன போஸ் காங்கிரஸில் துடிப்புடன் செயல்பட்டு வந்த காரணத்தால் அவரைத் தன் பால் ஈர்த்துக் கொள்வது சுலபம் என்று நினைத்தாரோ என்னவோ காந்தி அவர்கள், தெரியாது. ஏனெனில் ஏற்கெனவ போஸ் தேச ப்ந்து சி.ஆர். தாஸைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்ததையும் அவருடன் சேர்ந்து பல முறை சிறை சென்று ஒரு முறை நாடும் கடத்தப் பட்டதில் போஸின் பெயரும் சரி, அவரின் உழைப்பும் சரி, மிக உயர்ந்த இடத்துக்கு வந்திருந்தது. அதுவும் ஐரோப்பாவிற்கு அவர் சென்ற சமயம் உயர் பதவிகள் வகிக்கும் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டு அவர்களுடன் நட்புறவும் கொண்டார். இதுவும் அவரின் சாமர்த்தியமான் அணுகு முறை என்பதால் போஸ் பெயர் நாடு முழுதும் பிரபலமாய் இருந்தது. காந்தி அதை விரும்பவில்லை. அதைத் தனக்குச் சாதகமாய் உபயோகிக்க முயன்ற காந்தியால் போஸைத் தன் இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும். (காந்தி ஆதரவாளர்கள் மன்னிக்க வேண்டும். காந்தியின் பேரைக் கெடுக்கும் எண்ணம் ஏதும் இல்லை. இத்தனை நாள் கழிச்சு என் ஒருத்தியால் அது முடியவும் முடியாது.)செய்வதறியாது திகைத்த காந்தி அடிகளிடம் ஏற்கெனவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். 1931-ல் அப்போது தூக்கில் இடப்பட்ட பகத்சிங், ராஜ்குரு, சக்தேவ் போன்றவர்களை காந்தி ஆதரித்து ஆங்கிலேய அரசிடம் பேசுவார் என போஸ் எதிர்பார்த்தார்.
ஆனால் காந்தி அந்தச் சம்பவத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. போஸுக்கு அதில் ஏமாற்றம் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவரளவில் அவர் தான் தலைவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை, "மகாத்மா" என்றதும் போஸ் தான். 1939-ல் திரிபுராவில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களால் போஸின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவரை நீக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப் பட்டது. அந்தக் கூட்டத்துக்கு காந்தி போகவில்லை. போகாமல் நிராகரித்தார். ஆனால் அந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை நிராகரிக்கவில்லை. போஸ் இடைவிடாமல் காந்தியை அணுகி மூத்தவர்களின் இந்தக் கசப்பான அணுகுமுறையை மாற்ற வேண்டினார். ஆனால் காந்தி செவி கொடுக்கவில்லை. மெளனம் சாதித்தார். மூத்த தலைவர்களுக்கோ என்றால் போஸின் இந்தப் பெயர், புகழை மங்கச் செய்து அவரின் அரசியல் வாழ்வே முடிந்து விடும் இத்தோடு என்ற எண்ணம். காந்திக்கும் உள்ளூர அந்த எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ? அவரும் பேசாமலே இருந்தார். ஏற்கெனவே பட்டாபி சீதாராமையாவின் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட சொந்தத் தோல்வி என நினைத்த காந்தி போஸ் காங்கிரஸை விட்டு வெளியே செல்வதையே விரும்பினார். அதற்காக காந்தி எல்லாவிதமான தந்திரங்களும் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
காந்தி செய்தது சரியா? தப்பா? தெரியாது. போஸைக் கண்டு பயந்தாரா என்றும் தெரியாது. காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. காந்தியை விட போஸ் அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லை. அவர் சிறிய அளவில் தான் தெரிந்தவர், காந்தி அப்படி இல்லை எனச் சொல்வார்கள். அப்படி என்றால் காந்தி ஏன் போஸ் தலைமை வகிப்பதில் அசெளகரியம் அடைய வேண்டும்? அவருக்கு என்ன தொந்திரவு போஸால் ஏற்பட்டது? போஸ் தலைமை வகிப்பதை ஏன் காந்தி விரும்பவில்லை? காந்தியை ஆலோசிக்காமல் எதுவும் போஸ் தன்னிச்சையாகச் செய்தது இல்லை. வேகம் தேவை அவருக்கு. அதற்குக் காந்தியுடன் வாதாடுவார். காந்தியின் அஹிம்சைக் கொள்கையினால் சுதந்திரம் தாமதப் படும் என்பது அவர் கருத்து. ஆனால் காந்தியோ என்றால் ஆங்கிலேய அரசை விட போஸின் தலைமையையும் அவர் புகழையும் கண்டு அதிகம் பயந்தாரோ என்று சொல்லும்படி அவர் நடவடிக்கை இருந்தது அந்தச் சமயத்தில். இன்றளவும் வங்காளியர் எவரும் காந்தி திரிபுரா காங்கிரஸில் போஸுக்குச் செய்த அநியாயத்தை மறக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை போஸுக்குப் பின் தான் மகாத்மா.
பல புத்தகங்களைப் படித்துவிட்டும், என்னோட அப்பா, தாத்தா, ஆசிரியர்கள் இன்னும் பலர் கூறியதையும் வைத்தே இவற்றை எழுதி உள்ளேன். இவை நூற்றுக்கு நூறு உண்மையான செய்திகளே.

நேதாஜி எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்

பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.
பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.
1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.
இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.
23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*
23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.
தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

ராஷ் பிஹாரி போஸ்
நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான  வாழ்க்கை.

வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக 25.05.1886 ல் பிறந்தவர் ராஷ் பிஹாரி போஸ். சந்தன் நகரில் படிப்பு முடித்த ராஷ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வங்கத்தின் புரட்சி இயல்புக்கேற்ப, ராஷ் பிஹாரி போஸும்   விடுதலைப் போரில் ரகசியமாக இணைந்தார். அரவிந்தர் உள்ளிட்ட புரட்சி இயக்கத்தினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

குதிராம் போஸ் நடத்திய குண்டுவீச்சால் ஆங்கிலேய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்துஅலிப்பூர் சதி வழக்கு (1908) தொடரப்பட்டதுஅதில்  அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிஹாரி போஸும் அந்த வழக்கில் தேடப்பட்டார். அதிலிருந்து தப்ப வங்கத்தை விட்டு வெளியேறிய ராஷ், டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார். அப்போது புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக யுகாந்தர் புரட்சிக் குழு உறுப்பினர் ஆனார்.

25.12.1912  ல் டில்லியில் ஆங்கிலேயரை உலுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அன்றைய வைஸ்ராய் ஹார்டின்ச் பிரபு வின் பதவியேற்பு விழாவை ஒட்டி நிகழ்ந்த அணிவகுப்பில், யானை மீது அம்பாரியில் அமர்ந்து  வந்த வைஸ்ராய் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்; யானையின் மாவுத்தன் கொல்லப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வசந்த் குமார் பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்ஆனால்குண்டுவீச்சுக்கு  மூலகாரணமான புரட்சிக்காரரைப் பிடிக்க முடியவில்லை.  ராஷ் பிஹாரி போஸ் தான் இந்த கொலை முயற்சியின் பிதாமகர் என்பதை பிரிட்டீஷார் அறிய மூன்றாண்டுகள் ஆயின.

டில்லியில் குண்டுவீச்சுக்கு காரணமாக இருந்துவிட்டு இரவு ரயிலிலேயே டேராடூன் திரும்பிய ராஷ், எதுவும் அறியாதவர் போல மறுநாள் பணியில் ஈடுபட்டார். அதைவிட வேடிக்கை, வைஸ்ராய் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கு கண்டனம் தெரிவித்து அங்கு அவர் நடத்திய கூட்டம் தான். குண்டுவீச்சுக்கு காரணமானவரே அதை எதிர்த்து கூட்டம் நடத்தி நாடகமாடினார் என்றால் அவரது புரட்சி நடவடிக்கையின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து வைஸ்ராய் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஹார்டின்ச் பிரபு எழுதிய 'MY INDIAN YEARS' என்ற நூலில் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். குண்டுவீச்சில் கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், தில்லி சதி வழக்கு என்று குறிப்பிடப்படும் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ராஷ் பிஹாரி போஸை அவரது ஆயுள் மட்டும் பிரிட்டீஷ் போலீசாரால்  கைது செய்ய முடியவே இல்லை.

1913  ல் யுகாந்தர் இயக்கத்தின் தலைவர் ஜிதின் முகர்ஜியுடன் ராஷுக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவரது தலைமைப் பண்பை உணர்ந்த ஜடின், அவருக்கு மேலும் பொறுப்புகளை அளித்து அவரை மெருகேற்றினார்.

1914  முதல் 1918  வரை முதல் உலகப் போர் நடைபெற்றது. அதனைப் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட புரட்சியாளர்கள் திட்டம் தீட்டினர். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் இருந்த தீவிர வலதுசாரிகளின் ஆதரவுடன், அமெரிக்காவில் இயங்கிய கதர் கட்சி உதவியுடன், இந்தியாவிலிருந்த ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு பிரதான மூளையாக ராஷ் இருந்தார்.

ஆனால், ரகசிய ஒற்றர்கள் உதவியுடன் கதர் புரட்சியை கண்டுகொண்ட ஆங்கிலேய அரசு, புரட்சிக்கு முன்னதாகவே கடும் நடவடிக்கை எடுத்து, ஊடுருவலை நசுக்கியது. நாடு முழுவதும் புரட்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கடல் கடந்தும் அதன் தாக்கம் இருந்தது. சில இடங்களில் புரட்சியாளர்களின் கலகம் நடந்தாலும்,   ஆங்கிலேய அரசு பல இடங்களில் கொடூரமான நடவடிக்கைகளால் புரட்சியை அழித்தொழித்தது. இதில் ஈடுபட்ட பல முன்னணி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பினர். ராஷ் பிஹாரி போஸும் ஜப்பானுக்கு தப்பினார்.

ஜப்பான் சென்ற ராஷ் அங்கு அரசியல் அடைக்கலம் பெற்றார். ஜப்பானிலிருந்து ராஷை நாடு கடத்துமாறு பிரிட்டன் ஜப்பான் அரசை நிர்பந்தித்து வந்தது. எனவே வெவ்வேறு பெயர்களில் அங்கு அவர் அலைந்து திரிந்தார். அப்போது , ஜப்பானில்  செயல்பட்ட ஆசிய வலதுசாரி (பான் ஆசியன்தீவிரவாதிகளுடன் ராஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவரான சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு (1923)  ஜப்பானின் அதிகாரப்பூர்வ குடிமகனாக மாறிய ராஷ், பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டபோதும், ராஷ் பிஹாரி போசின் புரட்சி எண்ணம் கனன்றுகொண்டே இருந்தது. ஜப்பானில் இருந்த மற்றொரு விடுதலைவீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயருடன் இணைந்துஜப்பான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். அவர்களை வசீகரித்துஇந்திய விடுதலை  வீரர்களுக்கு  ஜப்பானின்  கடல் கடந்த ஆதரவு கிடைக்கச் செய்தார்.  

1942 , மார்ச், 29  - 30  ல், டோக்கியோவில் ஒரு மாநாட்டை  நடத்திய ராஷ், இந்தியா விடுதலைப் போராட்டத்திற்கு கடல் கடந்த ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

நேதாஜி
1942, ஜூன், 22  ல் பாங்காக்கில் இரண்டாவது மாநாட்டை ராஷ் கூட்டினார். அதில்தான், காங்கிரசிலிருந்து வெளியேறி புரட்சி வீரராக உருவான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு, ராஷ் பிஹாரி போஸ் அறைகூவல் விடுத்தார். ''போரினால் மட்டுமே இந்தியாவுக்கு விடுதலை சாத்தியமாகும்அதற்கான போர்ப்படைக்கு தலைமை தாங்க நேதாஜி முன்வர வேண்டும்'' என்று வரவேற்று,  அம்மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றினார் ராஷ்!

இந்திய போர்க்கைதிகள் பல்லாயிரம் பேர் பர்மாவிலும் மலேயாவிலும் ஜப்பான் படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜப்பான் ராணுவ அதிகாரிகளை அணுகிய ராஷ், அவர்களை தனது முயற்சியால் கவர்ந்து, இந்திய வீரர்களை விடுவிக்கச் செய்தார். அந்த வீரர்களைக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப். 1  ல்  அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய ராணுவம் என்று அழைக்கப்படுகிறது.

ஜப்பான் ராணுவ உதவியுடன், இந்திய சுதந்திர லீகின் படையாக அது அமைந்தது. ஆனால், ராஷுடன் செய்துகொண்ட  உடன்பாட்டின்படி ஜப்பான் படை நடந்துகொள்ளவில்லை. தங்களை மீறி INA செயல்படுவதாகக் கருதிய அவர்கள் அதனைக் கலைக்கச் செய்தனர். ஆயினும், INA வீரர்கள் கட்டுக் குலையாமல் இருந்தனர்.

இந்திய அரசின் வீட்டு சிறைவாசத்திலிருந்து தப்பிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்கு சென்றபோது, அவரை வரவேற்று, இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கூறினார் ராஷ். ‘ஆசாத் (இதன் பொருள் சுதந்திரம்என்ற கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு ஜப்பான் அதிகாரிகளுடன் பேசிய நேதாஜி, முடக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தை மீண்டும் கட்டமைத்தார். ராஷ், மோகன் சிங் உள்ளிட்டவர்கள் அதன் துடிப்புள்ள இயக்கத்திற்கு காரணமாயினர். இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, இந்தியா மீது போர் தொடுத்த INA வின் சாகசங்கள் தனி வீர காவியமாக எழுதப்பட வேண்டியவை. துரதிர்ஷ்ட வசமாக, உலகப்போரில் ஜப்பான் வீழ்ச்சி அடையவே, நமது விடுதலைக் கனவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப்போனதுஇப்போரில் நேதாஜி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறதுராஷ் பிஹாரி போஸும்  21.01.1945 ல் போரில் கொல்லப்பட்டார்.

ஜப்பான் அரசு ராஷ் பிஹாரி போஸின் வீரத்தை மெச்சிஅவருக்கு மறைவுக்குப் பிந்தைய 'ORDER OF RISING SUNஎன்ற உயர் விருதை வழங்கி  கௌரவித்தது.

நாட்டு விடுதலைக்குப் போராடிய ஒரே காரணத்திற்காக, சொந்த நாட்டைவிட்டு நீங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும்சென்ற இடத்திலும் தாயக  விடுதலைக்காக பாடுபட்ட மாபெரும் வீரர்   ராஷ் பிஹாரி போஸ்.

''டில்லி சலோ'' என்ற முழக்கத்துடன் ஆசாத் ஹிந்த் அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியும் ராஷ் பிஹாரி போஸ் தான்.
இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக அரும்பெரும் தியாகமும், அதிதீரச் செயல்களும் புரிந்த ராஷை மறந்ததால் தானோ, இன்று நமது நாடு சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிறது?

என்னைப்பற்றி