நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

*நேதாஜியை யாரால் மறக்க முடியும்!*

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள்
உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும்.      ஜெய் ஹிந்த்!"

(அவர் அன்று உரையில் குறிப்பிட்டபடியே சரியாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆகஸ்ட் 15, 1947 ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அவர் விரும்பியவாறு அல்ல. . . இந்தியா
- பாகிஸ்தானாக!)

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார் நேதாஜி.
"டெல்லிக்குச் செல்ல வழிகள் பல உள்ளது. டெல்லியே நமது நிரந்தர இலக்கு. மறந்துவிடாதீர்கள்."

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை சிங்கப்பூரில் இருந்து பாங்காக் நோக்கி
விமானம் மூலம் பயனமானார் நேதாஜி. சிங்கப்பூர் விமான தளத்தில் கண்ணீர் மல்க
அவருக்கு வழியனுப்பி வைத்தனர்.

பாங்காங்கில் இருந்து சைகோன் புறப்பட்டுச் சென்றார் நேதாஜி. அவருடன் இ.தே.ரா.
கர்னல் ஹபிபூர் ரஹ்மான், கர்னல் குல்சாரா சிங், கர்னல் பிரீதம் சிங், மேலும் அபித் ஹாசன், தேவ்நாத் தாஸ், எஸ்.ஏ. அய்யர் ஆகியோரும், ஜெனரல் இஸோடா, ஹக்கீயா, நெகிஷி ஆகிய ஜப்பானியர்களும் இரண்டு விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

சைகோனில் சென்று இறங்கிய நேதாஜியை கொண்டு செல்ல ஜப்பானிய குண்டு வீச்சு விமானம் ஒன்று தயாராக இருந்தது. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டும் தான் இடம்தர முடியும்
என்று ஜப்பானிய அதிகாரி ஒருவர் கூறினார். ஏற்றுக்கொள்வதா, தவிர்ப்பதா என்ற கேள்விக்கு விடைகாண தனது நண்பர்களுடன் நேதாஜி ஆலோசனை நடத்தினார்.

இறுதியில் நேதாஜி மட்டும் செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் மேலும் ஒருவருக்கு இடம்தர முடியும் என்று ஜப்பானியர்கள் கூற, கர்னல் ஹபிபூர் ரஹ்மான் உடன் செல்ல முடிவு செய்யப்பட்டது.

நேதாஜியும், ஹபூபும் மற்ற ஐவரையும் நோக்கி `ஜெய் ஹிந்த்' என்று முழக்கமிட்டுவிட்டு விமானத்திற்குள் சென்றனர். ஜப்பானிய விமானம் விண்ணில் எழும்பிப் பறந்தது.

நேதாஜியை சுமந்து கொண்டு பறந்த விமானம், சற்று நேரத்தில் அவர்களுடைய கண்களில் இருந்து விண்ணில் மறைந்தது. ஆனால் நேதாஜியும் இந்த மண்ணை விட்டு மறையப்
போகிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. `ஜெய் ஹிந்த்' என்று கூறிவிட்டு நேதாஜி புறப்பட்ட அந்த பயணம் அவருடைய அவருடைய இறுதிப் பயணமாக ஆனது!



ஆகஸ்ட் 22 ஆம் தேதி, நேதாஜி பயணம் செய்த போர் விமானம் ஃபார்மோசா தீவுகளுக்கு அருகே விபத்திற்குள்ளானது என்ற ஜப்பானிய வானொலி அறிவித்தது.

ஜப்பான் வானொலியில் அவர்கள் கூறிய செய்தியை, இன்றுவரை எவரும் நம்பவில்லை.

என்ன ஆனார் நேதாஜி? இந்திய விடுதலைக்காக தனது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் திட்டமிட்டு போராடிக் கழித்த அந்த மாபெரும் தலைவரின் நிலை இன்று வரை புரியாத புதிராகவே எல்லோருக்கும் இருந்து வருகிறது.

நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும் இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தர களமிறங்கிய, விடுதலைப் போர் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் அவர்கள் தொடுத்த
போர், 200 ஆண்டுக் காலம் இந்தியா மீது நீடித்த பிரிட்டிஷ் - வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு விரைவாக முடிவுகட்டி இந்திய விடுதலையை வேகப்படுத்தியதை யாரால் மறுக்க முடியும்!

*நேதாஜியை யாரால் மறக்க முடியும்!*

No comments:

Post a Comment

என்னைப்பற்றி