
கேந்திரபாரா : சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வீரச் செயல்களால் கவரப்பட்ட வக்கீல் ஒருவர், தன் வீட்டை அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான மியூசியமாக மாற்றியுள்ளார். ஒரிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் முகமது முஸ்டாக்(45). இவர், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சந்திர போசின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, தன் வீட்டை மியூசியமாக மாற்றி, அதில், நேதாஜி சார்ந்த அரிய பொருட்களை சேமித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து முகமது முஸ்டாக் கூறியதாவது: சிறு வயது முதல் நான் நேதாஜியின் தீவிர ரசிகன். என் வயது குழந்தைகள் பாலிவுட் ஹீரோக்களை விரும்பினர். ஆனால், நான் நேதாஜியை ஹீரோவாகக் கருதினேன். பின், அவர் சார்ந்த பொருட்களை சேகரிக்கத் துவங்கினேன். இதற்காக, ஏராளமான பணத்தை செலவு செய்தேன். நேதாஜி சார்ந்த என் தேடல்கள் இன்னும் தொடர்கின்றன. என், தனிப்பட்ட இந்த சேகரிப்பை காண, பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இவ்வாறு முஸ்டாக் கூறினார்.
முகமது முஸ்டாக் தன் மியூசியத்தை, ஒரு அறக்கட்டளை அமைப்பாக மாற்றவும் திட்டமிட்டு வருகிறார். கட்டாக் பகுதியைச் சேர்ந்த அசோக் பானர்ஜி என்பவரின் குடும்ப உறுப்பினர்களுடன், நேதாஜி எடுத்துக் கொண்ட புகைப்படம், இந்திய தேசிய ராணுவம், மணிப்பூர் விடுதலை நினைவாக வெளியிட்ட அஞ்சல் தலை, கடந்த 1997ம் ஆண்டு நேதாஜி நூற்றாண்டு பிறந்த நாள் விழா நினைவாக அரசு வெளியிட்ட இரண்டு அரிய நாணயங்கள் உட்பட பல அரிய பொருட்கள், முகமது முஸ்டாக்கின் மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment